சுரைக்காய்
கொடி இனத்தைச் சார்ந்த தாவரமான 
சுரைக்காய் சுவையான உணவு மட்டும் இல்லை. பல உயர்ந்த நற்குணங்கள் கொண்ட ஒரு 
மருந்தாகும். சுரைக்காய் குக்குபைஸ் புடலை இனத்தைச் சார்ந்தது ஆகும். 
‘இனிப்புச் சுரை’ அல்லது காட்டுச் சுரை’ என்றும் பிரித்துப் பார்ப்பது 
வழக்கம். சுரைக் காயை ஆசியா கண்டத்தில் உள்ள மக்கள் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு
 மேல் அறிந்து அதைப்பயன்படுத்தி வருவதாக வரலாறு கூறுகிறது. சுரையை 
கறிச்சுரை என்றும் குறிப்பதுண்டு. 
பொதுவாக கசப்பில்லாத சுரையே கறியாக சமைப்பதற்குப் பயன்படும். சுரைக் கொடியை
 மழைக்காலங்களில் வீட்டுத் தோட்டத்திலும் கொல்லைப் பகுதியிலும் பயிராக 
வளர்ப்பது வழக்கம். கிராமப்புறக் கூரைகளின் மேல் இதைப் படரவிட்டு வளர்ப்பதை
 நாம் இன்றும் பார்க்கலாம். சுரைக்காய் ஒரு குடத்தைப் போல உருண்டை 
வடிவுடையதாகும். பருமனாகவும், பளபளப்பாகவும், மேல் தோல் மிகவும் 
மிருதுவானதாகவும் இருக்கும். உட்பகுதியில் மிக்க சதைப்பற்றோடு விதைகள் 
வெண்மையாகவும் காணப்படும். சுரைக்காய் மிகுந்த நீர்ச்சத்து உடையது. 
இது சீதளத்தை உண்டாக்க வல்லது. சுரைக்கொடியின் கீரையைக் கூட சமைத்து 
(கடைந்து) உபயோகப்படுத்துவது உண்டு. நன்கு முற்றிய சுரைக் காயை ஒரு 
துளையிட்டு உள்ளிருக்கும் சதைப் பகுதியை நீக்கிவிட்டு ‘சுரைக்குடுக்கை’ 
என்ற பேரில் ஒரு பாத்திரம் போல் திட, திரவ பண்டங்களை வைப்பதற்காக இன்றும் 
பயன் படுத்துகின்றனர்.
சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:- 
இது சீதளத்தை உண்டாக்கக் கூடியது. உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கென இதை 
உபயோகப்படுத்தலாம். இது சிறுநீரைப் பெருக்கக்கூடிய சிறந்த உணவுப் பொருள். 
உடலில் நீரேற்றத்தால் வந்த வீக்கத்தை கரைக்க வல்லது. பூசணிக்காயை அல்வா 
என்னும் இனிப்புப் பண்டம் செய்வது போல சுரைக்காயையும் துருவி இனிப்பான 
அல்வா செய்யப் பயன்படுத்தலாம்.
வீக்கம், கட்டிகளைக் கரைக்கவும், கொப்புளங்களை ஆற்றவும் இதை நசுக்கி 
மேற்பற்றாகப் பயன்படுத்துவர். சுரைக்கொடியின் இலை சுடுநீர் மஞ்சள் காமாலை 
நோய்க்கு மருந்தாகத் தருவதுண்டு. சுரை இலையினால் நீர்க்கோர்வை, உடல் 
வீக்கம், முத்தோஷம் (வாத, பித்த, சிலேத்தும் குற்றங்கள்) போகும். சுரையின் 
இலை மலத்தை இளக்கவல்லது என்பதால் மலச்சிக்கல் உடையவர்கள் இதை கீரையாகக் 
கடைந்து சாப்பிடலாம். இது சீரணத்தையும் துரிதப்படுத்தவல்லது. சுரைக்கு 
பைத்தியத்தைத் தணிவிக்கும் தன்மையும் உண்டு.
சுரையில் அடங்கியுள்ள மருத்துவப் பொருட்கள்:- 
புதிதாக எடுக்கப்பட்ட 100 கிராம் சுரைக்காயில் கீழ் வரும் சத்துக்கள் 
அடங்கியுள்ளதாக அமெரிக்கத் தாவரவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிசக்தி (எனர்ஜி)-14 கலோரி, மாவுச்சத்து-3.39 கிராம், 
புரதச்சத்து--0.62கிராம், கொழுப்புச் சத்து- 0.02கிராம், நார்ச்சத்து- 
0.05கிராம், வைட்டமின்களான ‘போலிக் அமிலம்’ 6 மைக்ரோ கிராம், ‘நியாசின்’ 
0.320மி.கிராம், பேண்டோதெனிக் அமிலம் 0.152மி.கிராம், பைரிடாக்ஸின் 
0.040மி.கிராம், ரிபோப்ளேவின் 0.0220மி.கிராம் தயாமின் 0.029மி.கி., 
வைட்டமின் ஏ-16 ஐசி., வைட்டமின் ‘சி’ 10.1மி.கி. மற்றும் நீர்ச்சத்துக்களான
 சோடியம்-2மி.கி. பொட்டாசியம்-150மி.கி., தாது உப்புக்களான சுண்ணாம்புச் 
சத்து- 26மி.கி., தாமிரம் (காப்பர்)-0.034மி.கி., இரும்புச்சத்து- 
-0.020மி.கி., மெக்னீசியம்-11மி.கி., மேங்கனீசு--0.089மி.கி., 
பாஸ்பரஸ்-13மி.கி., செலினியம்-0.2மி.கி., துத்தநாகம் (ஸிங்க்)-0.70மி.கி. 
உள்ளடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவ வேதிப் 
பொருட்களை உள்ளடக்கி உள்ளதால் சுரைக்காய் ஓர் அருமையான மருந்தாக 
விளங்குகிறது.
சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:- 
இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் 
காணப்படும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை 
உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில்
 சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காமல் காக்கும். 
உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் 
கொடுக்கும். சுரைக்காயை கோடைக் காலத்தில் அதிகமாக சாப்பிட்டால் பிரச்சினையை
 எளிதில் சமாளிக்கலாம்.
சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி 
தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய் பயன்படுகிறது. சில சமயங்களில் 
சிறுநீர் வெளியேறாமல் மீண்டும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடலுக்கு பலவகையான
 இன்னல்களை ஏற்படுத்தும். இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற 
சுரைக்காய் உதவுகிறது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த 
சுரைக்காயை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ரசத்தையும் சேர்த்து
 அருந்தினால் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.
சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது தாகத்தை கட்டுப்படுத்தும். 
கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் 
சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு 
மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் 
அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.
கோடை காலத்திலும் நாக்கு வறட்சி ஏற்படும் போதும் பச்சையான சுரைக்காய் ரசம் 
சாப்பிட விரும்பினால் ஒரு கப் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு 
அருந்தினால் அதிகத்தாகம் தடுக்கப்படும். உப்பு போடாமல் இந்த ரசத்தை 
அருந்தக்கூடாது. சுரைக்காய் தன்னுள் 96 சதவீதம் நீர்ச்சத்தை 
பெற்றிருக்கிறது. இதனால் இதனுடைய சாறு எடுப்பது மிகவும் எளிதாகிறது. 
சுரைக்காய்ச்சாறு வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பி’, சோடியம், இரும்பு, 
பொட்டாசியம் ஆகிய சத்துக்களையும் பெற்றுள்ளதால் புத்துணர்வு தரக்கூடிய, 
சோர்வைப் போக்கக் கூடிய உணவாகப் பயன்படுகிறது.
ஒரு கப் சுரைக்காய் சாற்றில் 18மி.கி. துத்தநாகச்சத்து இருப்பதால் அது 
செல்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உட்சுரப்பிகள் (ஹார்மோன்கள்)
 ஒழுங்காகச் சுரப்பதற்கும் உறுதுணையாகிறது. உடல் பருமன் கொண்டவர்கள் 
சுரைக்காய்ச்சாறு ஒரு கப் அளவு எடுத்து அன்றாடம் காலையில் குடிப்பதால் உடல்
 எடை குறைந்து அழகான மெலிந்த தேகத்தைப் பெறுவர்.
பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் செறிந்த சுரைக்காய்சாறு ஒரு 
ஊட்டச் சத்துமிகுந்த உணவு மட்டுமின்றி பசியை அடக்கித் தேவையின்றி உணவு 
உண்பதைத் தவிர்த்து உடலை மெலியச் செய்யவும் உதவுகிறது. சுரைக்காய் தன்னுள் 
கரையக்கூடிய மற்றும் கரையா நார்ச்சத்துக்களை அபரிமிதமாகப் பெற்றுள்ளது. இது
 உணவாகும்போது சீரண உறுப்புகளுக்குப் பலம் தந்து அவற்றைச் செம்மைப்படுத்தி 
மலச்சிக்கலை மறையச் செய்கிறது.
மலச்சிக்கல் இல்லாதபோது இயற்கையாகவே வயிற்றில் அமிலம் சேர்ந்து புண் 
ஆகுதல், வயிற்றில் காற்று செரிந்து வயிற்றை அடைத்ததுபோல் தோன்றுதல் ஆகிய 
பிரச்சனைகள் சுரையை உண்பதால் இல்லாமல் போகும். மலச்சிக்கல் இல்லாதபோது 
ஆசனவாய்ப்புற்று வருவதும் அறவே தடுத்து நிறுத்தப்படுகிறது.
சுரைக்காயில் 95 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் தர்ப்பூசணி சாறு போல் 
கோடைக்கால வெயிலினால் வரும் உஷ்ணத்தைத் தவிர்க்க உதவுகிறது. உடலிலிருந்து 
வெளிப்பட்டு வியர்வையாய் சென்ற நீர்ச்சத்து குறையை ஈடுகட்டுவதாகவும் 
உள்ளது.
சுரைக்காய் சிறுநீற்றைப் பெருக்கவல்லது. சுரைக் 
காய்ச்சாறு உடலில் தேங்கிய நீரை வெளித்தள்ளி வீக்கத்தையும் கரைக்க 
உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் துணையாய் நிற்கிறது. சுரைக்காய் லேசான 
உறக்கத்தை வருவிப்பதாகவும் அமைகிறது. இதனால் தூக்கமின்மை, தலைவலி ஆகியன 
தவிர்க்கப்படுகின்றன.
அதிகமான வியர்வை, சோர்வு, மயக்கம், பேதி என ஏதேனும் ஓர் துன்பம் உற்றபோது 
ஒரு கப் சுரைக்காய் சாறு உடனடித் தீர்வாக உதவுகிறது. இழந்த நீர்ச்சத்தை 
சமன்படுத்துகிறது. சுரைக்காய் சாறு பருகுவதால் ஈரல் வீக்கத்தை 
தவிர்க்கலாம்.
சுரைக்காய் சாறு தயாரிக்கும் முறை:- 
சுமார் 300 கிராம் எடையுள்ள ஒரு சுரைக்காயை எடுத்துக் கொள்ளவும். முற்றாத 
பழுக்காததாக இருப்பது நல்லது. மேற்புறத்தை நீர்விட்டு சுத்திகரித்துக் 
கொள்ளவும். பிறகு மேற்தோலை சீவி நீக்கிவிட்டு சதைப்பற்றை மட்டும் எடுத்து 
சிறு துண்டுகளாக்கி, அதனுடன் 6 புதினா இலைகளைச் சேர்த்து மிக்ஸியில் இட்டு 
மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனோடு சிறிது சீரகப் பொடியையும் 
சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக தேவைக்கு ஏற்ற உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
 குளிர்விக்கும் பொருட்டு ஐஸ்கட்டிகள் சிலவற்றையும் சேர்த்து எடுத்துக் 
கொள்ள லாம். சுரைக்காய் சாறு இப்போது பருகத் தக்கதாக இருக்கும். 
சுரைக்காய் மருந்தாகும் விதம்:- சுரைக்காய்ச்சாறு பசுமையாக எடுத்து அன் 
றாடம் குடித்து வருவதால் உடல் எடை குறைவதோடு மார்பு தொடர்பான நோய்கள் 
பலவும் மறைந்துவிடும். சுரை இலையைச் சாறாக்கிக் குடிப்பதாலோ அல்லது 
சுடுநீரிட்டு சர்க்கரை சேர்த்துக்குடிப்பதாலோ வாந்தியை உண்டாக்குவதற்கும், 
மஞ்சள் காமாலை நோயைப் போக்குவதற்கும், ஈரல் வீக்கத்தை வற்ற வைப்பதற்கும் 
பயன் தருவதாக அமையும்.
சுரை இலையை மைய அரைத்து தலையில் நன்றாகத் தேய்த்து வைத்திருந்து 20 
நிமிடங்களுக்குப் பிறகு குளித்துவிடுவதால் தலை வழுக்கை தவிர்க்கப்படுவதோடு 
தலை முடியும் வளரும். தலை வலியும் தணியும். சுரை விதைகளைக் காய வைத்துப் 
பொடித்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவு எடுத்து தேனுடன் சேர்ந்தோ அல்லது 
நீரிலிட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்தோ குடிப்பதால் வயிற்றிலுள்ள 
பூச்சிகள் வெளியேறிபோகும்.
சுரைக்காய்ச் சாறு ‘அல்சர்’ என்னும்
 வயிற்றுப் புண்ணை ஆறச் செய்வதோடு அமிலச் சுரப்பை அடக்கிவைத்து 
செரிமானத்தைத் தூண்டிவிடும். சுரைக்காயை நசுக்கிப் பசையாக்கி மேற்ப் 
பற்றாகப் போடுவதனால் தீக்கொப்புளங்கள், நீர்க்கோத்து நோகச் செய்யும் 
கொப்புளங்கள் வந்த வடு தெரியாமல் விலகிவிடும்.
கோடைக்கால வெப்பத்தால் உண்டான தலைவலிக்கு சுரைக்காயை அரைத்து நெற்றிப் 
பத்தாகப் போட்டு வைக்க குணமாகும். சுரைக்கீரையோடு பூண்டு சேர்த்து ஒரு 
மண்டலம் சமைத்து சாப்பிட்டு வர நீரேற்றம் கரைந்து போகும்.
சுரைக்காய் விலை மலிவானது உன்னத மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. 
உஷ்ணத்தைத் தணிப்பது. உடல் எடையைக் குறைப்பது, சிறுநீரகம், இரைப்பை, இதயம் 
இவற்றுக்கு பலம் சேர்ப்பது கொப்புளங்களை குணப் படுத்துவது, தலைவலியைத் 
தணிப்பது, புத்துணர்வைத் தருவது எனத் தெரிந்து கொண்டோம். சீரான உடல்வாகு 
உள்ளவர்கள் தவிர அனைவருக்கும் இது உகந்தது என உணர்ந்து பயன்படுத்தி 
உய்வோம்.
                                    
No comments:
Post a Comment