மேலை நாட்டு குழந்தைகள் விதவிதமான தண்ணீர்
வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். அப்படிப்பட்ட சில தண்ணீர்
விளையாட்டுகளை நாமும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

நாம், கோடையில், வெப்பம் குறைவாக
இருக்கும் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கிறோம். தண்ணீர் நிறைந்த
இடங்களில் குளியல்போட்டும், விளையாடியும் மகிழ்ச்சி கொள்கிறோம். மேலை
நாடுகளில் தண்ணீர் பூங்காக்களுக்கும், பனிப்பிரதேசங்களுக்கும் படையெடுப்பது
அங்குள்ள மக்களின் வாடிக்கை. மேலை நாட்டு குழந்தைகள் விதவிதமான தண்ணீர்
வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். தண்ணீர் விளையாட்டுகள் என்றால்
நீச்சல், படகுப்போட்டி, தண்ணீர் ஜிம்னாஸ்டிக், ஐஸ் சிற்பம் போன்றவையல்ல.
வீட்டிலேயே எளிதாக விளையாடி மகிழும் வேடிக்கை விளையாட்டுகள். அப்படிப்பட்ட
சில தண்ணீர் விளையாட்டுகளை நாமும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
சிறிய பலூன்களில் நீர் நிரப்பிக் கொண்டு, மற்றவரை குறிபார்த்து எறிந்து
விளையாடுவது தண்ணீர் குண்டு அல்லது தண்ணீர் பலூன் விளையாட்டு என
அழைக்கப்படுகிறது. ஒருவர் சரியாக எறிந்து மற்றவரை ‘அவுட்’ ஆக்கிவிட்டால்,
அவர் பின்னர் பலூன் எறிவார். மற்றவர்கள் தப்பித்து ஓட வேண்டும்.
இதேபோல மற்றொரு விளையாட்டு உண்டு. பலூன்களில் ஊசியால் குத்தி ஓட்டை
போட்டுவிட்டு நீரால் நிரப்ப வேண்டும். பின்னர் சிறுவர்கள் ஒவ்வொருவர்
கையிலும் பலூனை கொடுத்துவிட்டு நீரை துளைவழியே அழுத்தி வெளியேற்றச் செய்ய
வேண்டும். யார் விரைவாக தண்ணீரை வெளியேற்று கிறாரோ அவரே வெற்றி பெற்றவர்.
யார் கடைசியாக தண்ணீரை மிச்சம் வைத்திருக்கிறாரோ அவர் தோற்றவர் ஆவார். இந்த
தண்ணீரை மற்றவர் மேல் பீய்ச்சி அடித்தும் விளையாடி மகிழலாம்.
நீர் நிரப்புதல்
பாட்டிலில் நீர் நிரப்பி விளையாடுவதுபோல, பஞ்சு மூலம் நீர் உறிஞ்சி நிரப்பி
விளையாடும் விளையாட்டு மேலை நாடுகளில் பிரபலம். பெரிய வாளி ஒன்றில் நீர்
வைத்துவிட்டு, ஆளுக்கொரு துண்டு பஞ்சு கொடுத்துவிடுவார்கள். அதை நீரில்
அமிழ்த்தி எடுத்துச் சென்று தனக்குரிய வாளியில் பிழிந்து நீரை நிரப்ப
வேண்டும். யார் முதலில் தனது வாளியை நிரப்பு கிறார்களோ அவரே வெற்றி
பெற்றவர் ஆவார்.

குழுவாக விளையாடக்கூடிய மற்றொரு நீர் நிரப்பும் விளையாட்டு உண்டு. ஒவ்வொரு
குழுவுக்கும் மூன்று முதல் 5பேராக பிரித்துக் கொள்ளலாம். பின்பு அவர்களை
நேர் வரிசையில், சிறிது தூர இடைவெளியில் நிறுத்தி வைக்கலாம். ஒருபுறம்
பெரிய பாத்திரத்தில் நீர் வைத்துவிட்டு ஒவ்வொரு குழுவுக்கும் சிறிய கோப்பை
அல்லது டம்ளர் கொடுக்க வேண்டும்.
ஒருவர் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்று அடுத்தவருக்கு
கொடுக்க, அவர் மற்றவருக்கு மாற்றிவிட இறுதியாக நிற்பவர் தங்களுக்கான காலி
பாத்திரத்தை நிரப்ப வேண்டும். படத்தில் உள்ளதுபோல நெருக்கமாக நின்று
பின்னால் இருப்பவருக்கு தண்ணீரை மாற்றியும் விளையாடலாம். எந்தக் குழு
விரைவாக செயல்பட்டு தங்கள் பாத்திரத்தை நீரால் நிரப்புகிறார்களோ அந்த குழு
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
நனையாமல் தப்பித்தல்...
புல் தரைக்கு நீர்ப்பாய்ச்சும் துளையுள்ள குழாய் இருந்தால் அல்லது தண்ணீர்
தெளிக்கும் ஸ்பிரேக்கள் இருந்தால் இந்த விளையாட்டு விளையாடலாம். தண்ணீர்
துப்பாக்கிகள் இருந்தாலும் இதை விளையாடலாம்.
முதலில் நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயை இயக்க ஒருவரை நியமித்துக் கொள்ள
வேண்டும் அல்லது தண்ணீர் ஸ்பிரே, தண்ணீர் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை
குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக நிற்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள்
ஸ்பிரே அல்லது துப்பாக்கி மூலம் தண்ணீரை தெளிக்க தயாராக நிற்க வேண்டும்.
தண்ணீர் தெறிக்கும் தூரத்தில் எல்லைக்கோடு வரைந்து, அதில் தண்ணீரில்
நனையாமல் ஓடிக்கடப்பதே போட்டியாக வைத்து விளையாட வேண்டும். விசில்
அடிக்கப்பட்டதும் மற்றவர்கள் தண்ணீரை தெளிக்க, போட்டியாளர் தண்ணீர் தன்மேல்
படாமல் குறிப்பிட்ட தூரம் ஓடிக் கடக்க வேண்டும். நனையாமல் ஒருவர் இலக்கை
அடைந்தால் அவர் வெற்றி பெற்றவர் ஆவார்.

தண்ணீர் வாலிபால்
ஒரு குழுவுக்கு 5 அல்லது 7 பேராக பிரித்துக் கொள்ள வேண்டும். ஏராளமான
பலூன்களில் சிறிதளவு தண்ணீர் நிரப்பி ஊதி வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை
முழு அழுத்தத்தில் நிரப்பாமல் சிறிது குறைவாக நிரப்பினால் எளிதில்
உடையாமல் இருக்கும்.
குழுவில் ஒருவர் பலூனை தங்கள் பக்கத்தில் இருந்து வலையைத் தாண்டி உயரமாக
தூக்கி எறிய வேண்டும். எதிர்திசையில் இருப்பவர்கள் இரண்டிரண்டு பேராக
சேர்ந்து துண்டின் நுனி களைப் பிடித்தவாறு, பலூன் உடையாமல் கேட்ச் பிடிக்க
வேண்டும். பலூன் கீழே விழுந்து உடைந்தால் எதிரணிக்கு புள்ளி வழங்கப்படும்.
துண்டினுள் உடைந்தால் பலூனை மாற்றிக் கொள்ளலாம். யார் நிறைய புள்ளிகள்
பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றியைத் தீர்மானிக்கலாம்.
பலூன் பிடித்தல்
நமது ஊர்களில் நடத்தப்படும் இசை இருக்கை (மியூசிக்கல் சேர்) போன்ற
விளையாட்டாக இதை விளையாடலாம். முதலில் பலூன்களில் நீர் நிரப்பிக்
கொள்ளுங்கள். பெரிய வட்டத்தில் சிறுவர்களை சிறிது இடைவெளியில் நின்று
கொள்ளுங்கள். பலூனை அடுத்தவர் கைகளுக்கு தூக்கி வீசச் செய்யுங்கள். யார்
பலூனை உடைக்கிறார்களோ அவர்கள் வெளியேறிவிட வேண்டும். அதேபோல மற்றவர்
கைகளுக்கு பலூனை எறியாமல், தூரமாக வீசினாலும் அவர்களும் வெளியேற வேண்டும்.
இறுதியில் யார் வெளியேறாமல் நிற்கிறாரோ அவர்தான் வெற்றியாளர் ஆவார்.
இந்த நீர் விளையாட்டுகளை விளையாடும் முன்பு, ஓய்வு நேர உடைக்கு அல்லது
குளியல் உடைக்கு மாறிக் கொள்ளுங்கள். வீட்டில் தம்பி பாப்பா இருந்தால்
குளியல் போடும் முன்பாக, இந்த தண்ணீர் விளையாட்டுகளை விளையாடி மகிழலாம்.
தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் இந்த விளையாட்டுகளை விளையாடி
மகிழலாம். குடிநீரில் விளையாடுவதையும், தண்ணீர் அதிகமில்லாத நேரத்தில்
தண்ணீரை கொட்டி விளையாடுவதும் அம்மாவுக்கு சங்கடத்தை தரும் என்பதை நீங்கள்
மறந்துவிடக்கூடாது குட்டீஸ். நீங்கள் அப்படி செய்ய மாட்டீர்கள்தானே.
சமர்த்து குட்டீஸ்...
No comments:
Post a Comment