போக்குவரத்து நெருக்கடிகள்
அதிகரித்துவிட்டதாலும், நடைபாதை பல இடங்களில் இல்லாததாலும், நடைபாதைகள்
இருக்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும் இப்போது பாதசாரிகள்
விபத்தில் சிக்குவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்களாக வழுக்கியோ,
சறுக்கியோ விழுந்துவிடுதல், வாகனம் அவர்கள் மீது மோதிவிடுதல் போன்ற
விபத்துக்கள் நிறைய நடக்கின்றன.
அதனால் லேசான
காயங்கள் முதல், உயிருக்கு ஆபத்தான காயங்கள் வரை ஏற்படலாம். வயதானவர்கள்
கீழே விழுந்துவிட்டால் கை-கால் எலும்பு முறிவு, இடுப்பு எலும்பு முறிவு
போன்றவை தோன்றலாம். பெரும்பாலானவர்கள் கீழே விழும்போது கையை
ஊன்றுகிறார்கள். அதனால் மணிக்கட்டு எலும்பு முறிவு ஏற்படும். தலை மற்றும்
முகத்திலும் அடிபடலாம்.
பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள்:
அதிக
வேகத்தில் செல்லும் வாகனம் ஒருவர் மீது மோதிவிட்டால், பலத்த காயம்
ஏற்படும். அதிக ரத்த இழப்பும் உருவாகும். அப்படிப்பட்ட விபத்தில் சிக்கி
ஒருவர் நிலைகுலைந்து கிடக்கும்போது அவரை பார்ப்பவர், அவருக்கு உதவுவது தனது
தலையாய கடமை என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்.
அடிபட்டவர்
சுவாசிக்கிறாரா? என்பதை முதலில் பார்க்கவேண்டும். ரத்தம் நிறைய வெளியேறிக்
கொண்டிருந்தால், அடிபட்ட இடத்தின் மேல் பகுதியில் ஒரு துணியால்
இறுக்கமாகக் கட்டி, ரத்த ஓட்டத்தை தடுத்து ரத்த இழப்பை நிறுத்த முயற்சிக்க
வேண்டும். அவருக்கு சுயநினைவு இருக்கிறதா? என்பதை அறிய மணிக்கட்டு, கழுத்து
நரம்பு மூலம் ‘பல்ஸ்’ பார்க்க வேண்டும். மூச்சு விடுகிறார்,
சுயநினைவுடனும் இருக்கிறார் என்றால் அவரது முகத்தில் சிறி தளவு தண்ணீர்
மட்டும் தெளித்தால்போதும். ‘பல்ஸ்’ இருக்கிறது ஆனால் மூச்சுவிடவில்லை
என்றால், பாதிக்கப்பட்டவரின் இதயப்பகுதியை 15 தடவை அழுத்திவிட்டு, இரண்டு
தடவை அவரது வாயோடு வாய் சேர்த்து ஊதி காற்றை உள்ளே செலுத்த வேண்டும்.
விபத்தில்
சிக்கியிருப்பவருக்கு கழுத்து எலும்போ, முதுகு எலும்போ முறிந்திருந்தால்
முதலுதவி செய்வதில் மிகுந்த கவனம் காட்டவேண்டும். ஆட்களை உதவிக்கு அழைத்து,
அசைத்து அவரை இஷ்டத்துக்கு தூக்கினால் முறிவுப் பாதிப்பு மேலும்
அதிகமாகிவிடும். எப்படி அடிபட்டு கிடக்கிறாரோ, அந்த நிலையிலே தூக்கி ஓரமாக
கிடத்த வேண்டும். காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால், காலில்
ஏதாவது ஒரு கட்டையை வைத்து கட்டி ஓரமாக தூக்கிக் கிடத்தவேண்டும்.
ஆபத்தான
விபத்தில் ஒருவர் சிக்கிக்கொண்டால் முதல் வேலையாக ஆம்புலன்சுக்கும்,
போலீசுக்கும் தகவல் கொடுங்கள். அவரை முழுமையான சிகிச்சை சவுகரியம் கொண்ட
மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்யுங்கள். சுயநினைவற்ற நிலையில்
இருப்பவரின் வாய்க்குள் தண்ணீரை ஊற்றி விடாதீர்கள். நீர் தொண்டைக்கு
போவதற்கு பதில் நுரையீரலுக்குள் சென்று ஆபத்தை அதிகரித்துவிடும்.
கட்டுரை:
டாக்டர் பி.ராதாகிருஷ்ணன்,
M.B.B.S, M.S (ortho) மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்,
சென்னை.
No comments:
Post a Comment