மரியாதை பண்பை பிள்ளைகளிடம் வளர்ப்பது எப்படி?
நம் பண்பாட்டுக்கே உரித்தான
மரியாதையைச் சொல்லித்தருகிறோமா? இந்த மரியாதைப் பண்பை பிள்ளைகளிடம் எப்படி
வளர்ப்பது என்று பார்க்கலாம்.
1. உங்கள் பிம்பங்கள்தானே உங்கள் பிள்ளைகள். அதனால், நீங்கள் பெரியவர்களைப்
பார்க்கும்போது, நெஞ்சுக்கு நேராகக் கைகளைக் குவித்து வணக்கம்
சொல்லுங்கள். உங்களைப் பார்த்துப் பிள்ளைகளும் பழகுவார்கள்.
2. பேருந்தில் செல்லும்போது வயதானவர்களோ, மாற்றுத்திறனாளிகளோ
நின்றுகொண்டிருந்தால், பிள்ளையை உங்கள் மடியில் உட்காரவைத்து, அவர்களுக்கு
இடம் கொடுங்கள். அதைப் பார்த்து அவர்களுக்கும் உதவும் குணம் உண்டாகும்.
3. வீட்டில் பிள்ளைகள் நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு முன்பு ‘தாத்தா
முறுக்கு சாப்பிடுங்க, பாட்டி பிஸ்கட் தரட்டுமா’ என்று கேட்டுவிட்டு
சாப்பிடச் சொல்லுங்கள்.
4. வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் வரும்போது, ‘அத்தை வாங்க, மாமா வாங்க’
என்று வரவேற்கப் பழக்குங்கள். வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களுக்கு
எழுந்து நின்று கைக்கூப்பி வணக்கம் சொல்ல கற்றுக்கொடுங்கள்.
5. உறவுகளின் திருமணங்களுக்கு முடிந்தவரை பிள்ளைகளையும் அழைத்துச்
செல்லுங்கள். அங்கே வரும் சொந்தங்களின் உயர்ந்த விஷயங்கள், பணிகள் பற்றி
எடுத்துச் சொல்லி அறிமுகம் செய்யுங்கள். அவர்களிடம் இருக்கும் குறைகளைச்
சொல்லாதீர்கள். இது, பிள்ளைகளுக்கு மரியாதைப் பண்பை கற்றுத்தருவதோடு,
உறவுகளும் பேணப்படும்.
6. வீட்டுக்கு உறவினர்கள் வந்தால், தொலைக்காட்சியை நிறுத்திவிட்டுப்
பேசுவதில் கவனம் செலுத்துங்கள். அதைப் பார்த்து பிள்ளைகளும்
பின்பற்றுவார்கள். தங்கள் செல்போன் விளையாட்டையும் கட் செய்வார்கள்.
7. ரொம்ப முக்கியமான விஷயம் இது. இன்றைக்கும் கிராமப்புறங்களில், ‘பாப்பா
வாங்க’, ‘தம்பி, சொன்ன பேச்சைக் கேளுங்க’ என்று மரியாதையுடனே
நடத்துவார்கள். இதுபோன்ற மரியாதையைப் பெற்ற பிள்ளைகள், மற்றவர்களுக்கும்
திருப்பித்தரும். எனவே, நீங்கள் எப்போதும் பிள்ளைகளை மரியாதையுடனே
அழையுங்கள். உங்கள் குழந்தையும் உயர்ந்த பண்புடன் இருப்பது 100 சதவீதம்
உறுதி.
No comments:
Post a Comment