healthy-food-is-ragi-koozh - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Saturday, 29 July 2017

healthy-food-is-ragi-koozh

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று கூழ். கேழ்வரகு, கம்பு போன்றவற்றின் கூழ்தான் முந்தைய நாட்களில் பிரதான உணவாகவே இருந்தன. நாளடைவில் கேழ்வரகு, கம்பு பயன்பாடு குறைந்து அரிசி உணவுக்கு மாறிவிட்டனர். ஆயினும் ஆடி மாதம் வந்தவுடன் கூழ்-க்கு தனி மவுசு ஏற்பட்டு விடும். அனைத்து அம்மன் கோயில்களிலும் கூழ் வார்த்தல் என்றவாறு அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய கூழ் வழங்கப்படும். இதன் மூலம் இன்றளவும் வீடுகளில் கூழ் செய்வது தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆடி மாதத்தில் ஆலயங்களில் கூழ் ஊற்றுவது போன்று அவரவர் இல்லங்களிலும் கூழ் சமைத்து அனைவருக்கும் வழங்குவர்.கூழ் என்பது கம்பு மற்றும் கேழ்வரகு மாவில் தயாரித்து கூழ் நிலையில் வழங்கப்படும் உணவு. அதிக அளவு தண்ணீர் சேர்த்து, உணவு பொருள் குறைவாய் கலந்து செய்யப்படும் கூழ் குறைந்த செலவில் அதிக நபர்களின் பசியை தீர்க்கும் அமிர்தமாகும். ஒரு செம்பு கூழ் குடித்து காலையில் வேலைக்கு செல்லும் விவசாயி, நாள் முழுவதும் களைப்பின்றி விவசாய பணியை மேற்கொள்வான்.

கூழ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் :

அன்றாட உணவாக தினசரி கூழ் குடித்த மக்கள் இன்று தங்களின் நோய்களை தீர்க்கும் மருந்தாக உட்கொள்கின்றனர். ஆம், சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்தல் வேண்டி தினம் காலையில் கேழ்வரகு கூழ், களி, ரொட்டி போன்றவை செய்து சாப்பிடுகின்றனர். கூழ் குடிப்பதன் மூலம் உடல் எடை குறைகிறது. உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதில்லை. வயிற்றுக்கு வலு அளிக்கிறது. கேழ்வரகில் கால்சியம் சத்து அபரிமிதமாக உள்ளதால் எலும்புகளுக்கு நல்ல வலுவை தரக்கூடியது.

கேழ்வரகு மாவை அரை கிலோ எடுத்து கொஞ்சம் தயிர் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் விட்டு கட்டி பிசைந்து புளிக்க வைக்கவும். மறுநாள் காலை 200 கிராம் பச்சரிசி நொய்யை பாத்திரத்தில் தண்ணீர் விட்ட வேக வைக்கவும். நொய் நன்கு வெந்தவுடன் அதில் புளிக்க வைத்த கேழ்வரகு மாவை ஊற்றி நன்கு கிளறவும். அடிபிடிக்காமல் கிளறி கொண்டே இருத்தல் வேண்டும். மாவு வெந்தவுடன் இறக்கி வைக்கவும். இதனை ஒருநாள் முன்பு செய்து வைத்து மறுநாள் பயன்படுத்தலாம். இல்லையெனில் காலையில் செய்தவுடனேயும் பயன்படுத்தலாம்.

தயார் செய்த கூழில் உப்பு, தண்ணீர், தயிர், சின்ன வெங்காயம் போட்டு நன்கு கலந்து குடிக்க வேண்டியது தான். கூழுக்கு கருவாட்டு குழம்பு, மாங்காய் போன்றவை சிறப்பு இணை உணவாக உள்ளன. “கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்” என்று ஓர் பழமொழியே உள்ளது.

கமகம கம்மங்கூழ் :

கம்பு வாங்கி சுத்தம் செய்து குருணையாக திரித்த கொள்ள வேண்டும். மாவாக அரைத்து விட கூடாது. ஒரு கப் பொடித்த கம்புக்கு 4 கப் தண்ணீர் என்றவாறு விட்டு நன்கு குழைய வேக விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். நன்கு வெந்தவுடன் இறக்கி வைத்து விடவும். முதல் நாள் மாலையில் செய்த கம்மங் கூழை காலையில் மோர் மற்றும் வெங்காயம் சேர்த்து தண்ணீருடன் கரைத்து குடிக்கலாம். கம்மங்கூழ் அதிக குளிர்ச்சி என்பதால் மழை காலங்களில் அதிகமாக உண்பதை தவிர்க்கவும்.

இலங்கையின் யாழ்ப்பாண பகுதிகளில் ஒடியல் கூழ் என்ற கூழ் செய்யப்படுகிறது. இது பனங்கிழங்கு மாவால் செய்யப்படும் வித்தியாசமான கூழ். இது மீன் வகையறாக்கள் சேர்த்து செய்யப்படும் அசைவ மற்றும் காரமான கூழ். ஒடியல் கூழ் வாசனை ஊரையே தூக்குமாம்.

No comments:

Post a Comment

Post Top Ad