Message-for-Ramalan: - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Sunday, 25 June 2017

Message-for-Ramalan:

புனிதம் நிறைந்த ரமலான் மாதத்தை நாம் அடைந்து அதன் சிறப்பை அனுபவித்துவருகிறோம். சில பொருட்கள் குறிப்பிட்ட சில காலத்தில் மட்டுமே கிடைக்கும். அது போல, நன்மைகளை அதிகம் தருகின்ற காலமாக ரமலான் மாதத்தை இறைவன் நமக்கு அமைத்து தந்துள்ளான். ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து “ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்.” என்று திருக்குர்ஆன் (2:185) என்று கூறுகிறது.

ரமலான் மாதத்தை அடைந்து விட்டால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அதிகமான தான தர்மங்களில் ஈடுபடுவார்கள்.

திருமறையின் வழியில், நபிகளார் செய்ததுபோல நாமும் ரமலான் மாதத்தில் அதிக நன்மைகளையும், தான தர்மங்களையும் செய்யவேண்டும். உயர்வான சிந்தனைகளை அதிகம் வளர்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு இந்த ரமலான் மாதத்தை கண்ணியப்படுத்த கடமைப்பட்டவர்களாக நாம் இருக்கின்றோம்.

ரமலானை எப்படி தொடக்கவேண்டும்? எவ்வாறு நிறைவு செய்ய வேண்டும் என்பதை அண்ணலாரின் அமுத மொழிகள் அழகுற சொல்லித்தருவதைப் பார்ப்போம்.

‘(நீங்கள்) பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். (பிறையை பார்ப்பதில்) உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை 30 நாட்களாக முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்’. (நூல்: புகாரி)

சுருங்கக்கூறி நிறைவான விளக்கத்தை தருவதாக உள்ள இந்த நபிமொழி மேகமூட்டம் போன்ற இயற்கையின் இடர்பாடுகள் ஏற்பட்டு பிறை தென்படாமல் போகுமானால், ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை ஷாபான் மாதப்பிறையை 30 ஆக பூர்த்தி செய்துவிட்டு ரமலானை தொடங்கிவிடலாம் என்பதையே இந்த நபிமொழி நமக்கு தெளிவுபடுத்தித் தருகிறது.


பூமியின் சுழற்றி காரணமாக ஏற்படும் காலநேர மாற்றத்தால், நோன்பை தொடங்குவதிலும், அதனை நிறைவு செய்வதிலும் ஒவ்வொரு நாட்டிலும் கால வித்தியாசம் ஏற்படுகிறது என்பது இயற்கையே. அதற்காக ஒன்றும் குழப்பமடையத் தேவையில்லை, இந்த வித்தியாசம் கூட அல்லாஹ்வின் தூதரின் வார்த்தையை பின்பற்றுவதின் அடையாளமாகவே அது மதிக்கப்படும்.

இறைவனின் அருளையும், அவனது அருள்மழையையும், கருணையையும் உணர வேண்டிய சிறப்பு மிக்கது ரமலான் மாதம். நிறைவான வணக்க வழிபாடுகளை கொண்டும், அமைதியை கடைப்பிடிப்பதை கொண்டும் இந்த ரமலானைக் கண்ணியப்படுத்த நம்மால் ஆன முயற்சியில் ஈடுபடவேண்டும்.

“(நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்’. ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்” என்ற திருக்குர்ஆன் (2:186) வசனப்படி நாம் நடந்துகொண்டு, ஏக இறைவன் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு நேரான வழியை அடைய இந்த ரமலான் மாதத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

‘ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றொரு நபிமொழியில், ‘நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

எனவே, இந்த ரமலான் காலத்தில் உடலையும், மனதையும் ஒருமைப்படுத்தி இறைவனின் நினைவில் நம்மை முழுவதுமாக பிணைத்துவிட வேண்டும். அதிக வணக்க வழிபாடுகளில் நேரத்தை செலவிடுவதும் தான் ரமலானை நாம் கண்ணியப்படுத்தியதாக அமையும்.

திருக்குர்ஆன் வழியிலும், நபிகளார் காட்டிய பாதையிலும் இந்த ரமலானை கடைப்பிடித்து கண்ணியப்படுத்தி, அதற்கு பரிசாக பாவமன்னிப்பும், சொர்க்கத்தில் நுழையும் வாய்ப்பையும் பெறுவோம். அத்தகைய மேலான நற்பாக்கியத்தை நம் அனைவருக்கும் இறைவன் தந்து பேரருள்புரிவானாக, ஆமீன்!

மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.

No comments:

Post a Comment

Post Top Ad