Children's home work tips for parents | Kalvikural Tips: - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Tuesday, 27 September 2016

Children's home work tips for parents | Kalvikural Tips:

படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்! – பெற்றோருக்கு ஆலோசனைகள்:
கேஜி’ முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள்  படும்பாடு சொல்லி மாளாது.  ஹோம் வொர்க் நேரத்தில் அந்தக் குட்டி
மனங்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற ஆலோசனைகளைச் சொல் கிறார், சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் டாக்டர் நப்பின்னை.
உங்கள் அட்டவணைக்குள் குழந்தைகளை அடைக்காதீர்கள்!
‘`பொதுவாக அம்மாக்கள், தங்கள் வேலைக்கு என ஒரு அட்டவணை வைத்திருப் பார்கள். அதில் ஒன்றாக, மாலை நேரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரம் பிள்ளைகளின் ஹோம்வொர்க்குக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்துக்குள் குழந்தைகளை வீட்டுப்பாடம் முடிக்க வைத்து, சீரியல், இரவு சமையல் என தங்களின் அடுத்த வேலையைப் பார்க்கச் செல்ல வேண்டுமே என்கிற அவசரம் அவர்களுக்கு இருக்கும். ஆனால், உங்களின் அவசரத்துக்கு குழந்தைகளால் ஈடுகொடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
‘ஒரு மணி நேரமா சொல்லிக் கொடுக்கிறேன், இன்னும் படிக்கல’ என்பது போன்ற உங்களின் கோபம், பதற்றம், கண்டிப்பு போன்றவை குழந்தைகளை அடுத்த ஐந்து நிமிடங்களில் அனைத்தையும் கற்க வைத்துவிடாது. ரைம்ஸையோ, எழுத்துக்களையோ, கணித எண்களையோ அவர்கள் கற்கும்வரை பொறுமையாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். அதற்கு முதல்படியாக, உங்கள் அட்டவணையில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும்!
அன்லிமிட்டட் நேரம்!
படிக்க, விளையாட, சாப்பிட என குழந்தைகளை அந்தந்த நேரத்துக்கான செயல்களைச் செய்யப் பழக்கப்படுத்துங்கள். அதே நேரம், செல்போன், டி.வி, அவுட்டிங் என்பதை எல்லாம்விட உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அதிகப்படியான நேரத்தை ஒதுக்குங்கள். அப்படி செய்யும்போது, வீட்டுப்பாடத்துக்கான நேர நிர்ணயத்துக்குள் முடிக்கவைக்க வேண்டிய கட்டாயம் காணாமல் போகும்.
கவனச் சிதறல் இயல்பே!
பெரியவர்களாலேயே 20 நிமிடங்களுக்கு மேல் ஒரு செயலில் கூர்மையான கவனம் செலுத்த முடியாது என்பது அறிவியல் உண்மை. அப்படியிருக்கும்போது, குழந்தைகள் ஒரு மணி நேரம் எந்த கவனச் சிதறலும் இன்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து சின்சியராகப் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயம்? எனவே இடையிடையே, ‘அம்மா தண்ணி குடிக்கணும்’, ‘சுச்சூ வருது’, ‘ஸ்கூல்ல இன்னைக்கு என்னாச்சு தெரியுமா?’ என்று அவர்கள் பாடம் தவிர வாய் திறந்தாலே கோபம் தலைக்கேறக் கத்தாதீர்கள். ‘அதுக்காக இப்படி பிரேக் எடுத்து பிரேக் எடுத்துப் படிச்சா கன்டினியூட்டி போயிடும், மறுபடியும் முதல்ல இருந்து சொல்லிக்கொடுக்கணுமே?’ என்று புலம்ப வேண்டாம். புரிந்து கற்றுக்கொள்ளும் எந்தப் பாடத்தையும் குழந்தைகள் மறப்பதில்லை. ஆக, அவர்களுக்குப் புரியும்படியாகச் சொல்லிக் கொடுங்கள் எந்தப் பாடத்தையும்.
கற்பிக்கும் முறையில் மாற்றங்கள்!
குழந்தைகளுக்குப் புரியும்படி பாடம் கற்றுக் கொடுப்பதற்கான வழி என்ன தெரியுமா? அதை அவர்களுக்குப் பிடிக்கும் விதங்களில் கற்றுக்கொடுப்பதுதான். அதற்கு உங்களின் கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்யுங்கள். ஒரு வாரமாக கஷ்டப்பட்டும், திட்டியும், அடித்தும் சொல்லிக்கொடுத்து அவர்கள் மனதில் பதியாத ரைம்ஸை,  நடனம், கதை என உடல் அசைவுகளின் வாயிலாகவும்,  சந்தோஷமான மனநிலையிலும் சொல்லிக்கொடுங்கள். அது நிச்சயம் அவர்கள் மனதில் பதிந்துவிடும். ‘சர்க்கிள் ஷேப்’பை கற்றுக்கொடுக்க, புத்தகத்தில் உள்ள வட்டத்தையே நம்பாமல் பூரி, வளையல், தட்டு என்று வாழ்க்கையில் இருந்து அவர்களுக்கு அந்த வடிவத்தைக் காட்டுங்கள். மேலும், கண்ணால் பார்த்து, வாய்விட்டுப் படித்து, எழுதிப் பார்த்து என இந்த மூன்று முறைகளில், எந்த முறையில் பாடம் கற்க உங்கள் குழந்தைக்கு விருப்பம் என்பதைத் தெரிந்து, அதற்கேற்ற வகையிலும் சொல்லிக் கொடுங்கள்.
பிரேக் எடுங்கள்… தவறில்லை!
இத்தனை செய்த பிறகும், படிப்பினூடே ‘தண்ணி குடிக்கணும்’, ‘விளையாடப் போறேன்’ ‘சூச்சூ வருது’ என குழந்தை சொன்னால், ‘சரி வா… நானும் வர்றேன். வெளியே கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோம்’ எனச் சொல்லுங்கள். அந்த நிமிடங்கள் வீட்டுப்பாட இறுக்கத்தில் இருந்து அவர்களைத் தளர்வாக்கும். மீண்டும் புத்தகங்களோடு புத்துணர்வோடு அமரலாம். 
பொறுமை அவசியம்!
கவனிக்கும் திறன் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு சற்று கூடுதல் மெனக்கெடல் தேவைப்படும்தான். ஆனால், அது இயலாத காரியம் என்றில்லை. இவர்களுக்கு அடிப்படைகளை தெளிவுறப் புரியவைப்பது, மீண்டும் மீண்டும் அவற்றை நினைவுபடுத்துவது, கூடுதல் பொறுமையுடன் கற்றுக் கொடுப்பது அவசியம்.
குழந்தைகளைப் பொறுத்தவரை படிப்பு என்பது என்ன?!
சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் படிப்பில் அக்கறை வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கற்றுக் கொடுக்கும் பாடத்தின் அருமை உங்களுக்குப் பெரிதாக தெரிய லாம். குழந்தைகளுக்கோ அது ஒரு வீட்டுப்பாடம்… அவ்வளவுதான்.  விளையாட்டு, பொழுதுபோக்குபோல அன்றாடமான ஒரு விஷயம்தான் அவர்களைப் பொறுத்தவரை படிப்பும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சிலபஸுக்கும் மேற்பட்ட பாடங்கள், பொது அறிவு விஷயங்களை அழுத்தம் கொடுத்துக் கற்றுக்கொடுப்பார்கள். அது மன அழுத்தத்தைத்தான் அதிகரிக்கும்.
மொத்தத்தில், குழந்தைகளின் போக்குக்கு நீங்கள் மாறி அவர்களைப் படிக்கவையுங்கள்!” என்கிறார் டாக்டர் நப்பின்னை.

No comments:

Post a Comment

Post Top Ad